Saturday, 1 November 2008

** சென்னையில் திரையுலகத்தினர் உண்ணா நிலைப் போராட்டம்: முன்னணி நடிகர், நடிகைகள் பற்கேற்பு.

ஈழத் தமிழர்கள் மீதான சிறீலங்கா அரசின் தாக்குதல்களைக் கண்டித்தும், போரை உடனடியாக நிறுத்தக் கோரியும் சென்னையில் தமிழ்த் திரையுலகத்தினர் இன்று உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இன்று சனிக்கிழமை காலை 8 மணியளவில் சென்னையில் அமைந்துள்ள நடிகர் சங்க வளாத்தின் முன்றலில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட நிழல் கொட்டகையில் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மெழுவர்த்தி ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.


நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா, ஜெயம் ரவி, கார்த்திக், சிவக்குமார், நெப்போலியன், பிரகாஷ்ராஜ், சத்யராஜ், பசுபதி, அர்ஜூன், மணிவண்ணன், வடிவேலு, சுந்தர் சி, நடிகைகள் சினேகா, மும்தாஜ், ராதிகா சரத்குமார், சத்யப்பிரியா, குயிலி, மனோரமா உள்பட பலரும் உண்ணாநிலைப் போராட்டத்திற்காக காலையிலேயே வந்துவிட்டனர்.ஏனைய முன்னணி நடிகர்களான ரஜனி, விஜயகாந், அஜித், ஆகியோர் முற்பகல் வேளை இந்த உண்ணாநிலைப் போராட்டத்திற்கு வருகை தந்தனர். கமலஹாசன் மதியம் வருகை தந்தார்.ஏனைய முன்னணி நடிகைகளான, நயன்தாரா, திரிஷா, சினேகா, சந்தியா போன்றோரும் பின்னர் வருகை தந்தனர்.

நடிகர்கள் மிகக் கவனமான வார்த்தைத் பிரயோகத்துடன் தமது உணர்வான உரைகளை வழங்கினர். நடிகர்களின் உணர்வுப் பேச்சுகளிடையே எம்.ஜி.ஆர் நடித்த பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மற்றும் நடிகைகள், இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கவேண்டும் என்றும், அங்கு போர்நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மாலை 4 மணி வரை நடைபெற்ற, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக முக்கிய கோரிக்கைகள் அடங்கிய பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறித்த தீர்மானங்கள் உள்ளடங்கிய மனு பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் தமிழர் தேசிய இயகத் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
pathivu.com
*****

No comments: