இலங்கையில் தமிழர்களது பிணங்கள் புதைக்கப்படவில்லை. விதைக்கப்படுகின்றன. நாளை இந்த விதைகள் மீண்டும் முளைக்கும். தமிழர்களுக்கான இடத்தை, உரிமையை அந்த மக்களுக்கு கொடுத்துவிடுங்கள். அதுதான் இலங்கைக்கு நல்லது என நடிகர் ரஜினி கூறினார்.இலங்கையில் நடக்கும் யுத்தத்தை உடனடியாக நிறுத்த ராஜபக்சே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினையில் பெரிய நாடுகள் தலையிட வேண்டி வரும் என்றும் கூறினார்.இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், உடனடி போர் நிறுத்தம் கோரியும் நடிகர் நடிகைகள் சென்னை நடிகர் சங்க வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.போராட்டத்தில் பங்கேற்ற ரஜினிகாந்த், உண்ணாவிரதம் முடியும் வரை மேடையில் அமர்ந்து அனைவரது பேச்சுக்களையும் கேட்டார். பின்னர் அவர் பேசியதாவது:
இது மிக அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு போராட்டம். பாதிக்கப்படுகிற தமிழ் மக்கள் குறித்த தங்கள் உணர்வுகளை கலைஞர்கள் வெளிப்படுத்தும் வகையில் நல்ல முறையில் ஏற்பாடுகளைச் செய்துள்ள நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவியை நான் பராட்டுகிறேன்.இங்கே சில கட்டுப்பாடுகள் (பேசுவதற்கு) விதிக்கப்பட்டிருந்தன. நல்லதுதான். கட்டுப்பாடில்லாத மனிதனால் எதையும் சாதிக்க முடியாது.
இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை இங்கு விளக்கிய ராதாரவி மற்றும் திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் பல இலங்கைத் தமிழர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் பேசுகிற தமிழுக்கு தனி இனிமை. அவர்கள் திட்டினால்கூட அது சங்கீதம் மாதிரி இனிமையாக இருக்கும்.அந்த நல்ல மக்களுக்கு தங்கள் நாட்டில் வசிக்கிற உரிமை கூட இல்லை என்பது எத்தனை வேதனைக்குரிய விஷயம்!.அவர்கள் வேண்டுமென்றா இப்போது போரில் இறங்கினார்கள்...?. சாத்வீகமான முறையில் தங்கள் உரிமைகளைக் கேட்டுப் பார்த்தவர்கள், வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தியிருக்கிறார்கள்.
இப்போது உடனடித் தேவை யுத்த நிறுத்தம்தான். போரை நிறுத்துங்கள், இங்கே ஒலிக்கிற இந்தக் குரல் ராஜபக்சேவின் காதுகளுக்குக் கேட்க வேண்டும்.ராஜபக்சே அவர்களே... உங்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். தமிழ் மக்கள் கேட்பது என்ன? சம உரிமைதானே... அதைக் கொடுப்பதுதான் உங்களுக்கு நல்லது.
உங்கள் சிங்கள அரசிடம் ராணுவம், விமானப்படை, கப்பல் படை என முப்படைகளும் உள்ளன. இந்த முப்படைகளை வைத்துக்கொண்டு, உரிமைக்காகப் போராடும் அந்த மக்களை உங்களால் அழித்துவிட முடிந்ததா? 30 ஆண்டுகளாக அவர்களை உங்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.அப்புறம் என்ன படை உங்களுடையது!. ஏன் இந்த நிலை... அந்த மக்கள் உண்மைக்காக, உரிமைக்காக போராடுகிறார்கள்.உங்கள் ராணுவத்தின் தோல்வியை ஒப்புக் கொள்ள முடியவில்லை உங்களால். காரணம் உங்கள் ஈகோ. உண்மையை ஒத்துக்கிட்டு அவர்களின் உரிமைகளைக் கொடுங்கள்.
ஏழை மக்கள், சாமான்ய, அப்பாவி மக்கள் கஷ்டப்பட்டால் ஒரு நாடு உருப்படாது. அவர்களது மூச்சுக் காற்று மண்ணில் பட்டால் கூட அந்த நாடு உருப்படாது. பல ஆண்டுகளாக கொத்துக் கொத்தாக உதிரம் சிந்தி மடிகிறார்கள் அந்த மக்கள்.அவர்களது பிணங்கள் புதைக்கப்படவில்லை. விதைக்கப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நாளை இந்த விதைகள் மீண்டும் முளைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.இலங்கையில் தமிழர்களுக்கான இடத்தை, உரிமையை அந்த மக்களுக்கு கொடுத்துவிடுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது.
இந்தக் குரலுக்கு நீங்கள் செவிசாய்க்கவில்லை எனில் பெரிய நாடுகள் இந்த மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிவரும் என்றார் ரஜினிகாந்த்.பின்னர் இலங்கைத் தமிழர் துயர் துடைப்பு நிதியாக தன் பங்குக்கு ரூ.10 லட்சத்தை வழங்குவதாக அறிவித்தவர், உடனடியாக அதற்கான காசோலையை சரத்குமாரிடம் வழங்கினார்.
*****








No comments:
Post a Comment