இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து நடத்தப்படும் இந்த உண்ணாவிரத்ததில் கட்டுப்பாடாகப் பேச வேண்டும் என்றார்கள். இந்திய அரசை எதிர்க்கக் கூடாது, சிங்கள பேரினவாத, கொடுங்கோல் அரசையும் எதிர்க்கக் கூடாது. உணர்ச்சியையும் காட்டக் கூடாது... அப்படின்னா என்னதான் பேசறது...?இலங்கையில் இதுவரை தமிழர்கள் யாரும் கொல்லப்படவில்லை, அவர்கள் சர்க்கரை வியாதி வந்தும், மாரடைப்பு வந்தும் செத்துப் போனார்கள் என்று சொல்லிவிடலாமா... ஒரு தமிழனைக் கூட சிங்கள இன வெறிபிடித்த ராணுவம் கொல்லவே இல்லை என்று சான்றிதழ் தரணுமா...செஞ்சோலைக் குழந்தைகள் செத்தது கூட அப்படித்தானா... சிங்களர்கள் குண்டுபோடும் போது செஞ்சோலைக்குள் புலிகள் இருந்தார்கள், குண்டு போட்ட பிறகு அவர்கள் குழந்தைகளாக மாறி செத்துப்போய்விட்டார்கள் என்று சொல்லச் சொல்கிறீர்களா... விட்டா அப்படியும் சொல்வீர்கள். காரணம் தமிழன் இளிச்சவாயன் பாருங்க...
ஊட்டியில் நாங்கள் வழக்கமாக ஷூட்டிங் நடத்தும் ஒரு பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் யாருக்கும் இப்போதெல்லாம் அனுமதி கிடையாது. காரணம் அங்குள்ள குரங்குகள் அந்த நேரத்தில் இனவிருத்தியில் ஈடுபடுமாம். மனிதர்களின் சத்தம் கேட்டு அதுங்களுக்கு மூட் அவுட் ஆகிடக் கூடாதுன்னு இந்தத் தடையாம்...இந்தக் குரங்குகளை விட கேவலமாகப் போய்விட்டானா தமிழன்!
இந்திய அரசைக் கண்டிக்காமல் எப்படி இருக்க முடியும்... என் பணத்தில் வாங்கிய ஆயுதத்தை வைத்தே என் உறவுகளைக் கொல்லும் இந்த அரசைக் கண்டிக்காமல் இருக்க முடியுமா...இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதை இந்தியா இப்போது ஒப்புக் கொள்கிறது. அந்த ஆயுதங்கள் யார் பணத்தில் வாங்கப்பட்டவை...? அந்தப் பணத்தில் இந்தத் தமிழர்களின் வரிப் பணமும் சேர்ந்துள்ளதல்லவா? என் வரிப்பணத்தில் ஆயுதம் வாங்கி என் இனத்தையே அழிப்பதை வேடிக்கைப் பார்க்கச் சொல்கிறீர்களா...
தமிழர்கள்தான் இலங்கையின் பூர்வ குடிகள். சிங்களர்கள் ஒரிஸ்ஸாவிலிருந்து போனவர்கள். இலங்கையைப் பொறுத்தவரை வந்தேறிகள் சிங்களர்கள்தான். ஒருவேளை இந்தியாவிலிருந்து போனவர்கள் என்பதால்தான் சிங்களர்கள் மீது இந்திய அரசு இவ்வளவு பாசம் காட்டுகிறதா... தமிழர்களை இரண்டாம் தரமாக நினைக்கிறதா...?
ஈழத் தமிழர்கள் ஆயுதமேந்தியது வேறு வழியே இல்லாத்தால்தான். இதை புரிந்து கொள்ள வேண்டும். காட்டில் கொடிய மிருகங்களுக்கும் பாம்புகளுக்கும் மத்தியில் துப்பாக்கியோடு ஈழ மக்கள் அலைந்து கொண்டிருப்பதை பிக்னிக் என்று நினைத்துவிட்டீர்களா... அவர்கள் புலம் பெயர்ந்து எங்கோ அவதிப்பட்டுக் கொண்டிருப்பது இஷ்டப்பட்டா... நியாயமாகக் கேட்ட உரிமைகளைத் தரமறுத்த போது போராட்டத்தில் குதித்ததில் என்ன தவறு?
உலகில் யூதர்களை விட அறிவில் மேம்பட்டவர்கள் தமிழர்கள். குறிப்பாகத ஈழத் தமிழர்கள். அவர்கள் இன்று படும் கஷ்டங்களை, வலிகளை தங்கள் சந்ததிகளுக்கும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாளைய சுதந்திரத்தின் அருமை அவர்களுக்கும் புரியும்.இங்கே ஈழ மக்களுக்கு ஆதரவாக சிலர் உணர்ச்சிவசப்பட்டுக் கூட பேசலாம். ஆனால் அதற்காக கைது வரை அரசு போகக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். கைதுக்கு பயந்தவர்கள் அல்ல நாம். ஆனால் நியாயத்தை, உணர்வைக் காட்டியதற்காக கலைஞர்கள் மீது சட்டம் பாயக் கூடாது. இந்தப் போராட்டத்தை திசை திருப்ப யாரும் முயற்சிக்கக் கூடாது என்றார் சத்யராஜ்.
*****








No comments:
Post a Comment