இலங்கை தமிழர்கள் தங்கள் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டதாலேயே ஆயுதமேந்தினார்கள். போர் ஒரு நிரந்தரத் தீர்வல்ல என்றாலும் உரிமைகள் மறுக்கப்படும்போது தீவிரவாதம் பிறந்தே தீரும், என்றார் கமல்ஹாசன்.இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இன்று நடிகர் சங்க வளாகத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்ற கமல்ஹாசன் பேசியதாவது:இங்கே பேசுவதற்கு சில அறிவுரைகள் சொல்லப்பட்டன. உள்ளதைச் சொன்னாலே கோபித்துக் கொள்ளும் இந்த உலகத்தில், உள்ளத்தில் இருப்பதைச் சொன்னால் சும்மா இருப்பார்களா...இங்கே அமர்ந்துள்ள கலைஞர்களுக்கும், அங்கே உண்மையைப் பேசியதற்காக முள்கிரீடம் சுமந்து சிறைக்குப் போய் நேற்று மலர் கிரீடத்துடன் வலம் வந்த தம்பிகள் அமீர், சீமானுக்கும் சரி எனது வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.
இங்கே இலங்கைப் பிரச்சினை குறித்த நம் பார்வையில் சில திருத்தங்களைச் சொன்னார் திருமாவளவன். அவர் சொன்னது முற்றிலும் சரியானது. இலங்கை இனப் பிரச்சினை முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இலங்கையிலிருந்து அகதிகளாக வரும் தமிழர்களுக்கு இங்கே நாமே ஒரு ஈழ நெல்லையை, ஈழ மதுரையை உருவாக்கித் தருவோம் என்று பேசினார் எஸ்ஜே சூர்யா. ஆனால் அதற்கெல்லாம் அவர்களின் தன்மானம் இடம் தராது. அப்படி ஒப்புக் கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்களும் இனத்தால் தமிழர்கள் அல்லவா...
இங்கிலாந்திலிருந்து போய் அமெரிக்காவில் குடியேறியவர்கள்தான் இன்றைய அமெரிக்கர்கள். ஆனால் இங்கிலாந்தை தங்கள் தாயகம் என்று அவர்கள் சொல்லிக் கொள்வதில்லை. இங்கிலாந்து வெள்ளைக்காரர்களுக்கும் அமெரிக்க வெள்ளையர்களுக்கும் இருப்பது போன்ற ஒரு உணர்வுதான் ஈழத் தமிழர்களுக்கும் நமக்கும் உள்ளது. ஆனால் இன உணர்வு எப்போதும் உள்ளது. ஈழம்தான் அவர்கள் மண். அங்குதான் அவர்கள் இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் மண்ணைத் திருப்பித் தர வேண்டும்.
இந்தப் பிரச்சினையை தமிழர்களின் பிரச்சினை என்று குறுகிய வட்டத்துக்குள் பார்க்க வேண்டாம். இது ஒரு உலகப் பிரச்சினை. இனப் படுகொலை எங்கு நடந்தாலும் அதை எதிர்த்து உலக மக்கள் அனைவரும் போராட வேண்டும்.இலங்கைப் பிரச்சினைக்கு போர் ஒரு நல்ல தீர்வாகாது. அதை உலகமும் அறிந்துள்ளது, மகாத்மா பிறந்த இந்தியாவும் உணர்ந்துள்ளது. ஆனால் உரிமைகளுக்கு உத்தரவாதமில்லாதபோது தீவிரவாதம் பிறந்தே தீரும். நாளை சுதந்திரம் கிடைத்தால் இந்த தீவிரவாதிகள் தியாகிகளாவார்கள்.
வாஞ்சிநாதன் துப்பாக்கி எடுத்தபோது என்ன வாதி...! ஒருவர் தீவிரவாதியா இல்லையா என்பதா காலம் முடிவு செய்யட்டும். மனிதர்கள் நாம் அதை முடிவு செய்யக்கூடாது.இனப் பிரச்சினையில் சுமுக முடிவு இல்லாததால்தான் அவர்கள் ஆயுதமேந்திப் போராடுகிறார்கள். எனவே முதலில் ராணுவம் போரை நிறுத்தட்டும். இலங்கையில் இந்த போர் நிறுத்தத்தை உடனே கொண்டு வருவது உலகக் கடமை. எந்தக் குழந்தை செத்தாலும் சோகம்தான். இலங்கை அரசு எங்களின் இந்தக் குரலுக்கு உடனே செவிசாய்க்க வேண்டும். இல்லேயேல் இன்னும் இதுபோன்ற குரல்கள் உரத்து ஒலித்துக் கொண்டே இருக்கும், என்றார் கமல்.
*****








No comments:
Post a Comment