Wednesday, 17 December 2008

** வன்னியில் படையினர் 170 பேர் பலி, 420 பேர் காயம், 36 உடலங்கள் மீட்பு - சிறுவர்கள் படையில் இருப்பது அம்பலம்!

கிளிநொச்சி, கிளாலியில் சிறீலங்கா படைகள் மேற்கொண்ட பாரிய முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்டதில், படைகள் தரப்பில் கொல்லப்பட்ட படையினரது எண்ணிக்கை 170ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை 5:00 மணிமுதல் மாலை 4:00 மணிவரை கிளிநொச்சியில் இடம்பெற்ற மோதலில் 130 படையினர் கொல்லப்பட்டதுடன், மேலும் 300இற்கும் படையினர் காயமடைந்துள்ளதாக, களமுனைத் தளபதிகளை ஆதாரம்காட்டி விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக கிளாலியில் 40 படையினர் கொல்லப்பட்டதுடன், 120இற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்ததுடன், 8 படையினரது உடலங்களும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டிருந்தன.

கிளிநொச்சியில் புலிக்குளம், குஞ்சுப்பரந்தன், மலையாளபுரம், முறிகண்டி ஆகிய நான்கு முனைகளில் இருந்து படையினர் முன்னேறி வல்வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன்போது விடுதலைப் புலிகளின் முன்னரங்க போராளிகள் மேற்கொண்ட உக்கிரமான முறியடிப்புத் தாக்குதலில் பெருமளவிலான ஆயுதங்களும், படையிரது 28 உடலங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக புலித்தேவன் கூறினார்.

முதலில் 10 உடலங்கள் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், பின்னர் 8 உடலங்களும், இன்று புதன்கிழமை காலை 10 உடலங்களுமாக மொத்தம் 28 உடலங்கள் கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைப்பற்றப்பட்ட உடலங்கள் மூலம் புதிதாக படைக்கு இணைக்கப்பட்டவர்களும், 18 அகவைக்கு குறைந்த சிங்கள இளைஞர்களும் படையில் இணைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள விடுதலைப் புலிகள், அது பற்றிய நிழற்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.


கிளிநொச்சியில் கடந்த சில வாரங்களுக்குள் படையினர் மேற்கொண்ட மூன்றாவது முன்னகர்வு முயற்சி இதுவெனவும் புலித்தேவன் தெரிவித்தார்.

ஏ.கே-எல்.எம்.ஜி - 2
பி.கே-எல்.எம்.ஜி - 1
ரி-56 துப்பாக்கிகள் - 6
உட்பட பல ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் கைப்பற்றப்பட்ட 28 உடலங்களையும், கிளாலியில் நேற்று காலை கைப்பற்றப்பட்ட 8 உடலங்களுமாக 36 உடலங்களையும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் ஊடாகக் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

_________

Pathivu.com

No comments: