‘மலையைக் கெல்லி எலியைப் பிடித்த மாதிரி’ இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் திட்டம் ஒன்றை பல டசின் கணக்கான அமர்வுகளின் பின்னர் தயாரித்து விட்டதாக அறிவித்திருக்கின்றார் அனைத்துக் கட்சிகள் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண.மணப்பெண் இல்லாமல் திருமணத்தை நடத்தி முடித்துக் காட்டியவர் போன்று இருக்கின்றது அவரது செயற்பாடும் அறிவிப்பும்.
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள்குழு என்பதே வெறும் கண்கட்டு வித்தை - கபட நாடகம் - என்பது உலகறிந்த பரகசியம்.இந்தக் கட்டமைப்பு பெயரில் ‘அனைத்துக் கட்சி’ என்று கொண்டிருந்தாலும் ஒட்டுமொத்தமாக அரசுத் தரப்பில் இருக்கும் கட்சிகளின் கூட்டுத்தான் என்பது வெளிப்படையானது. பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. அதிலிருந்து வெளியேறிவிட்டது. அடுத்த பிரதான கட்சியான ஜே.வி.பியும் கூட இந்த அனைத்துக் கட்சிக் கட்டமைப்பைப் புறக்கணித்துப் பகிஷ்கரிக்கின்றது.
ஈழத்தமிழர் தரப்பில் மொத்த நாடாளுமன்ற பிரதி நிதித்துவத்தில் தொண்ணூறு வீதத்துக்கும் அதிகமான பங்கைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு இந்த அனைத்துக் கட்சிக் கூட்ட செயற்பாடுகளுக்கு அழைக்கப்படவேயில்லை.ஆக, அரசுத் தரப்பில் இருக்கும் கட்சிகளும் எதிரணியில் இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தான் இந்த அனைத்துக் கட்சிக் கூட்ட அமர்வுகளில் பங்கு பற்றி வந்தன.
எதிரணியிலிருக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி (முன்னாள் மேலக மக்கள் முன்னணி) கூட இந்த அமர்வுகளில் ஒழுங்காகப் பங்குபற்ற முடியாத வகையிலேயே இந்தக் கட்டமைப்பின் கூட்டங்கள் இடம்பெற்றன. இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பிரதான தரப்புகளில் ஒன்று ஈழத்தமிழினம். அத்தரப்பின் பங்குபற்றுதலின்றித் இந்தக் கட்டமைப்பினால் தயாரிக்கப்பட்ட திட்டம் எதுவும் ‘இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அனைத்துக் கட்சிகளின் யோசனைகள்’ என முன்னிறுத்தப்படமுடியாது என்பது கவனிக்கத்தக் கதாகும். வேண்டுமானால் ‘இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் யோசனைத் திட்டமாக’ இதனை முன்னிறுத்த முடியும்.ஆனால் அதில் கூட ஒரு சிக்கல் உள்ளது.
தென்னி லங்கையின் பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.கட்சி, ஜே.வி.பி. போன்றவற்றின் உடன்பாட்டுடன் இப்போதைய திட்டம் தயாராகவே இல்லை. தவிரவும் அரசுத் தரப்பில் இருக்கும் சிங்கள-பௌத்த பேரினவாதத் தரப்பான ஜாதிக ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி போன்றவை இப்போது இறுதியாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் யோசனைத் திட்டத்தை அங்கீகரிக்கின்றனவா என்பதும் தெரியவில்லை.
ஆகவே, இப்போது முன்வைக்கப்படுவதாகக் கூறப் படும் திட்டத்தை ‘அனைத்துக் கட்சிகளின் யோசனைத் திட்டமாக முன்வைப்பதற்குப் பதிலாக ‘அரசுத் தரப்பில் உள்ள கட்சிகளின் யோசனைத் திட்டமாக’ குறிப்பிட்டால் அது சிலசமயங்களில் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் மேற்படி பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான இந்த ‘அனைத்துக் கட்சிப் பிரதிநி திகள் குழு’ பல சந்தர்ப்பங்களில் அனைத்துக் கட்சிகளின் அமைப்பாக இயங்காமல், அரசுத் தலைமையின் ‘எடுபிடி’ அமைப்பாகச் செயற்பட்டது என்பது வெளிப் படையாகத் தெரிந்த விடயம்.கிழக்கைக் கைப்பற்றிய இலங்கை அரசை அச்சமயம் அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப்படுத்தும் படி இந்தியாவும் ஏனைய சர்வதேச அமைப்புகளும் வற்புறுத்தின.
அவ்வேளை உலக நாடுகளின் காதில் பூச்சற்றுவதற்காக அரசரமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் என்ற நாடகத்தை அரங்கேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டம் வகுத்தார்.அவரது அந்தத் திட்டப்படி-அவரது இயக்கத்தில்- கனகச்சிதமாகச் செயற்பட்டு, அவர் வழிகாட்டியபடி, அவர் எதிர்பார்த்தபடி, இடைக்காலத்திட்ட யோசனை என்ற பெயரில் ஒரு வரைவைக் கொண்டு வந்து அவரிடம் சமர்ப்பித்தது இந்த அனைத்துக் கட்சிக்குழு.
இந்த இடைக்கால யோசனைத் திட்டவரைவை கூட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவால் சுயாதீன மாகத் தயாரிக்க முடியவில்லை என்பதும்-இவ்விடயத்தில் அது தயாரித்த மூலப்பிரதி நான்கு தடவைகள் ஜனாதிபதியின் கவனத்துக்கு தனிப்பட்ட முறையில் கொண்டு செல்லப்பட்டு, வெட்டிக் கொத்தி, நீர்த்துப்போக வைத்த பின்னரே-ஜனாதிபதியின் இசைவுக்கு ஏற்ப வெறிதாக்கப்பட்டே-அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. என்பதும்-தெரிந்தவையே.
எனவே இலங்கை ஜனாதிபதியால், அவரது இச்சைக்கு ஏற்ப செயற்படும் வகையில் கருமமாற்றும் இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவினால் சமர்ப்பிக்கப்படக் கூடிய யோசனைத் திட்டத்தை அனைத்துக் கட்சி யோசனை’ என அழைப்பதை விட ‘அரச தரப்பின் யோசனை’ என்று குறிப்பிடுவதே பொருத்தமானதாகும்.ஈழத் தமிழர்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்கி, நீதியான முறையில் அதிகாரத்தைப் பகிர்வதற்கு பௌத்த-சிங்களப் பேரினவாதம் தயாரில்லாதபோது, அதனால் சமர்ப்பிக்கப்படக்கூடிய எந்தத் தீர்வு யோசனையிலும் நீதி, நியாயமான அம்சங்கள் அடங் கியிருக்குமென எதிர்பார்ப்பது-நம்புவது-அபத்தமே.
_________
Uthayan.com
Subscribe to:
Post Comments (Atom)








No comments:
Post a Comment