சிறீலங்காப் படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஐந்து மாதக் குழந்தை உட்பட அப்பாவிப் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது அகோர எறிகணை தாக்குதலில் ஐந்து மாத குழந்தை பலி தாய் படுகாயமடைந்துள்ளார்.இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் வட்டக்கச்சியில் இடம்பெயர்ந்து கட்சன் வீதி தகரப் பிள்ளையார் கோவிலடி பகுதியில் தங்கியுள்ள குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சரமாரியாக வீசிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது.
இதன்போது, வீட்டில் துணி ஏணையில் உறங்கிக்கொண்டிருந்த ஐந்து மாத குழந்தையான ஜெயரூபன் அஜந்தா கொல்லப்பட்டுள்ளதுடன் குழந்தையின் தாயாரான 26 வயதுடைய ஜெயரூபன் ஜேம்ஸ்ராணி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று இன்று கிளிநொச்சி கனகபுரப் பகுதியில் தங்களது வீடுகளைப் பார்வையிடச் சென்ற பொதுமக்களில் இருவர் சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் சிக்கிப் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இடம்பெயர்ந்து விசுவமடு புத்தடியில் வசித்து வந்த இராமையா பாலேந்திரன் என்பவர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளார். இவருடன் கொல்லப்பட்டபொதுமகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.காயமடைந்தவர் பெரியகுளம் புளியம்பொக்கணையில் வசித்து வந்த தம்பிஐயா யசீகரன் (வயது 17)என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
_________
Pathivu.com








No comments:
Post a Comment