Thursday, 25 December 2008

** சமாதானப் பிரபுவின் மார்க்கத்தை தொடர்ந்தாலேயே அமைதி சாத்தியம்

மனுக்குலத்தின் மேய்ப்பர் - இறைதூதர் - தேவசுதன் - சமாதானப் பிரபு - இயேசுபிரான் அவதரித்த தினத்தை கிறிஸ்தோதயத் திருநாளாகப் பூவுலகம் இன்று கொண்டாடுகின்றது. பூமிப்பந்துக்கு அமைதியையும் சமாதானத்தையும் கொண்டு வருவதே அவரது வாழ்வாகவும் வழிகாட்டலாகவும் ஜீவனாகவும் அமைந்தன. அமைதி நெறியையே - சமாதான மார்க்கத்தையே - அவர் நமக்குப் போதித்தார்.சமாதான தாகத்தில் - அமைதி தேடலில் - அல்லலுற்றுத் தவிக்கும் உலக சமூகத்துக்கு சமாதானச் செய்தியை எடுத்து வந்தார் இயேசுபிரான்.

ஆனால் அது இன்றும் ஈழத் தமிழருக்கு எட்டாக் கனியாக இருப்பதுதான் வேதனை.2001 இல் கிறிஸ்தோதயத் திருநாளை ஒட்டிப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஒருதலைப்பட்சமாக அறிவித்த யுத்தநிறுத்தம், சமாதானம் பற்றிய ஒளிக்கீற்றாக ஈழத் தமிழ் மக்களுக்குத் தோன்றியது. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் - பண்டிகைக் காலத்தை ஒட்டிய வேளையில் - யுத்த நிறுத்த முறிவு பற்றிய இலங்கை அரசின் உத்தியோகபூர்வ அறிவிப்புடன் சமாதான நம்பிக்கை தளர்ந்து, அமைதி வாய்ப்புக் கருகி, இலங்கைத் தேசம் யுத்தப் பேரிருளில் மூழ்கியது.

மகிமையில் இருக்கும் தேவனுடைய குமாரனாக இருந்தும் மீட்பராகிய ஆண்டவன் இயேசு கிறிஸ்து, வேற்றுமை பார்க்காது, மானுட சமூகத்துக்காக மகிமையிலிருந்து கீழிறங்கி வந்து மானுடனானார். காலத்தைக் கடந்த இறைவன், ஞாலத்தைக் காப்பதற்காக - ஓலமிடும் மக்களுக்கு சீலத்தைப் போதிப்பதற்காக - காலத்துக்கு உட்பட்டவரானார்; பாடுகளைச் சுமந்தார்; பலரையும் அரவணைத்தார்.

அவரின் பணி ஆரம்பம் முதல் இறுதிவரை சமாதானத்தை அறிவித்து, அமைதியை நிலைநாட்டும் ஒப்புயர்வற்ற திருப்பணியாகவே அமைந்தது என்பதை நற்செய்தியை அறிவிக்கும் ஏடுகள் நமக்குப் பகர்கின்றன.அவர் தமது பணி வாழ்வை ஆரம்பித்த சமயம் மலைப் பிரசங்கத்தில் கூட அமைதியையே வலியுறுத்தினார். "அமைதியை ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர்.

ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் எனப்படுவோர். அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவர்." (மத். 5: 9) என்று அங்கு குறிப்பிட்டார் தேவசுதன்.ஆனால், இங்கோ - இன்றோ - அமைதியை ஏற்படுத்தும் கருமத்தை ஆற்றுவதற்கு வாய்ப்பும், வசதியும், சந்தர்ப்பமும், அதிகாரமும், செல்வாக்கும் பெற்ற அரசியல் தலைவர்களோ, தேவசுதன் காட்டிய பாதையை மறந்து, சாத்தான் வழி நடக்கும் அலங்கோலமே அரங்கேறுகிறது.

இந்தத் தேசத்தில் - இலங்கைத் தீவில் - சமாதானம் குறித்துப் பேசுவோர் தேசத்துரோகிகளாக இன்று வர்ணிக்கப்படுகின்றார்கள். பேரழிவு தரும் யுத்தத்தில் வெறிகொண்டு அலைவோர் தேசபக்தர்களாகப் போற்றப்படும் அவலட்சண நிலை, சீலம் பேசும் தேசத்தில் அரங்கேறுகின்றது.பாலகன் இயேசுவின் பிறப்பு பெத்தலகேம் நகரில் இற்றைக்கு சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த சமயம் அது பற்றிய செய்தியை முன்மொழிந்த வானதூதர்கள் "உன்னதங்களில் கடவுளுக்கு மகிமை உண்டாகுக. பூவுலகில் நன்மனதுடையோருக்கு அமைதி ஆகுக!" (லூக். 2:14) என்றே அறிவித்தார்கள்.

"இருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கணடார்கள். மரண இருள் படிந்த நாட்டில் உள்ளோருக்கு ஒளி கிடைத்தது; சுடர் வீசியது." - இதுவே ஆண்டவன் இயேசுவின் பிறப்புக் குறித்து முன்னறிவிக்கப்பட்ட வாசகங்களாகும்.

ஆக, இயேசு பிரானின் பூமிக்கான திருவருகையும், நற்பணியும் இந்தப் பூவுலகில் அன்பையும், அமைதியையும், சமாதானத்தையும், சமரசத்தையும், சகோதரத்துவத்தையும் நிலை நிறுத்துவதையே இலக்காகக் கொண்டு அமைந்தன. அதற்காகவே அவர் பாடுகளைச் சுமந்தார். தமது உயிரையும், உடலையும் கூட அர்ப்பணித்தார்.

ஆனால் தேசங்களை வழிநடத்துவோர் அந்தப் புனிதரின் வழிகாட்டலில் புதைந்து கிடக்கும் அன்பையும் உயரிய செய்தியையும் புரிந்துகொள்ள - உணர்ந்துகொள்ள - மறுத்து உன்மத்தர்களாக, அராஜகங்களை நாடி, அடக்குமுறையாளர்களாகவும், ஒடுக்குமுறைவாதிகளாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.அதனால் இன்று எங்கும் அவலம்; எங்கும் நலிவு; எங்கும் சோகம்; எங்கும் துன்பம்.

இயேசுபிரான் காட்டிய வழியில் மற்ற மனிதர்களையும், இனத்தவர்களையும், மாற்றாரையும் தம்மைப்போல மாண்புடன் மதிக்கும் உயரிய பண்பியல்பு ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருப்போருக்கு வந்தால்தான் இங்கு தேவன் விரும்பிய - வழிகாட்டிய - நிரந்தர அமைதியும், நிலைத்த சமாதானமும் ஏற்படும். அப்போதுதான் இருளில் நடந்து வந்த மக்களுக்குப் பேரொளி கிட்டி, மரண இருள் படிந்த நாட்டில் உள்ளோருக்கு ஒளி கிடைத்து, அதன் பலனாக முன்னறிவிக்கப்பட்ட வாசகங்கள் நிஜத்தில் - யதார்த்தத்தில் - செயலுருப் பெறும்.

அதை எட்டுவதற்கு உழைப்பதே எமது பணியாகட்டும் எனப் புனிதர் அவதரித்த இந்த நன்னாளில் திடசங்கற்பம் கொள்வோமாக!
__________
Uthayan.com

No comments: