Thursday, 25 December 2008

** வன்னியில் இடம்பெயர்ந்தவர்க்கு உணவுப் பொருள்களோ, மனிதநேய உதவிப் பொருள்களோ அனுப்பவில்லை! ஐ.நா.சபையின் வொல்டர் கலின்

வன்னியில் இடம்பெயர்ந்தவர்க்கு போதியளவு உணவுப் பொருள்களோ, மனிதநேய உதவிப் பொருள்களோ அனுப்பவில்லை என ஐ.நா.சபையின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகளுக்கான செயலாளர் வொல்டர் கலின் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் முகாம்களில் தடுத்துவைக்கப்படக் கூடாது எனத் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி, இடம்பெயர்ந்தவர்களும் சுதந்திரமாக நடமாடுவதற்கு உரிமையுடையவர்கள் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது

வன்னியிலிருந்து வெளியேறிய மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் களிமோட்டை மற்றும் சிறுகண்டல் முகாம்களின் நிலைமைகள் குறித்தும் தனது கடிதத்தில் விசாரித்திருக்கும் அவர், பொதுமக்கள் ஆயுதக் குழுக்களிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டியவர்களாக இருந்தாலும், அந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவ நடவடிக்கைகள் காரணமாக பாதுகாப்பற்ற சூழ்நிலை காணப்பட்டால் மாத்திரம் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மக்களை மாற்றும் உரிமை இருப்பதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோதலில் ஈடுபட்டிருக்கும் தரப்பினர், பொதுமக்களின் மனிதநேய உதவிகளை முன்னெடுப்பதற்கான பொறிமுறையை அமுல்படுத்த உரியவர்களுக்கு அனுமதி வழங்கவேண்டும்.

அனைத்துத் தரப்பினரும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மதித்து நடக்கவேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
_________
Pathivu.com

No comments: