Monday, 22 December 2008

** இரணைமடுவிலிருந்து சிறிலங்கா படையினர் பின்வாங்கினர்: பாதுகாப்பு இணையத்தளம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் தனது நிலைகளில் இருந்து சிறிலங்கா படை பின்நகர்ந்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் பாதுகாப்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இரணைமடு பகுதியில் நிலைகொண்டிருந்த படையினர் மீது கடந்த சனிக்கிழமை (20.12.08) பாரிய வலிந்த தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினர். இரணைமடுவின் வடக்கு பகுதியில் தாக்குதல் தொடங்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் உக்கிர தாக்குதலை தொடர்ந்து படையினர் தமது நிலைகளை கைவிட்டு பின்வாங்கியுள்ளது. படையினர் அரை கிலோ மீற்றர் தூரம் பின்நகர்ந்துள்ளதாகவும் இந்த மோதலில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாகவும் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகள் தமது சிறப்பு அணிகளை பயன்படுத்தியிருந்ததாகவும், அவர்கள் குண்டு துளைக்காத கவசங்களையும், தலைக்கசவங்களையும் அணிந்திருந்ததாகவும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரணைமடு பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு கிலோ மீற்றர் நீளமான படையினரின் நிலைகளை அவர்கள் கைப்பற்றியிருந்ததுடன் இதில் 60-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டும், 150-க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததுடன் 15 உடலங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
___________
Puthinam.com

No comments: