Monday, 22 December 2008

** புலிகளை தடைசெய்யும் முடிவை விரைவில் அறிவிப்பார் ஜனாதிபதி? - பெரும்பாலும் அவரது கிறிஸ்மஸ் தினச்செய்தியில்!

விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கான முடிவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரைவில் அறிவிக்கக்கூடும் என்று இந்திய இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் எதிர்வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுக்கும் செய்தியில்,விடுதலைப் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்குமாறு அவர் கோருவார் அல்லது தடையை எதிர்கொள்ளுமாறு எச்சரிக்கை விடுப்பார் என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி மேற்படிசெய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த இணையத்தள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

விடுதலைப் புலிகள் மீது தடைகளை விதிக்கவேண்டுமா விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தற்போதைய சட்டங்கள் போதுமானவையா என்பது குறித்து அரசுக்குள் கடும் விவாதமொன்று இடம்பெற்றுள்ளது.கண்டி தலதா மாளிகையின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து 1998 இல் விதிக்கப்படட தடை செப்டெம்பர் 2002 இல் நீக்கப்பட்டது.

தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பேச்சுகளில் ஈடுபட முடியாது என விடுதலைப்புலிகள் தெரிவித்ததைத் தொடர்ந்தே இத்தடை நீக்கப்பட்டது.மீண்டும் தடைகளை விதிப்பதன் மூலம் விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள மக்களுக்கும் கடுமையான செய்தியைச் சொல்ல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்புகிறார்.
விடுதலைப் புலிகளைத் தடை செய்யாமலே அரசு இதுவரை போரை முன்னெடுத்தது. இராணுவ நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளதன் காரணமாக தற்போது அரசுக்குத் தனது அணுகுமுறைகளை மேலும் சரி செய்யவும் புதிய வியடயங்களைச் சேர்க்கவும சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கிளிநொச்சி எப்போது கைப்பற்றப்படும் என்பது குறித்து உறுதியாக எவரும் எதனையும் தெரிவிக்காதபோதிலும் அரசியல் வட்டாரங்கள் மூன்று மாதங்கள் எனத் தெரிவிக்கின்றன. யுத்த முனையில் கிடைக்கும் வெற்றிகளை அடிப்படையாக வைத்தே அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்போம் எனப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி விடுதலைப் புலிகள் மீதான தடையை விதித்ததும் புதுடில்லிக்கும் இதன் மூலம் வெளிப்படையான செய்தியொன்றைச் சொல்வார் என அரச வட்டாரங்கள் குறிப்பிட்டுளளன.
__________
Uthayan.com

No comments: