Saturday, 20 December 2008

** யுத்த நிறுத்த நிராகரிப்பு!

‘சமாதானப் பிரபு’ இயேசுபிரான் அமைதியையும், சகவாழ்வையும், சமரசத்தையும் போதிக்கவே பிறப்பெடுத்தார். அவரின் பிறப்பைப் பிரதிபலிக்கும் கிறிஸ்மஸ் காலத்தில் யுத்தத்தை நிறுத்தி அமைதியையும், சமாதானத்தையும் கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டமை பொருத்தமானதே.

இது பண்டிகைக் காலம். இன்னும் ஐந்து நாட்களில் கிறிஸ்மஸ். தொடர்ந்து புது வருடப்பிறப்பு. அதன் பின்னர் தைப்பொங்கல். இவ்வாறு பண்டிகைகள் தொடரும் காலத்திலாவது உயிரிழப்புகளையும் அழிவுகளையும் தவிர்த்து அமைதி பேணுவது நாகரிகப் பண்பாகும்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம், மன்னார், அநுராதபுரம் மறை மாவட்டங்களின் கத்தோலிக்க ஆயர்களும், கொழும்பு, குருநாகல் பகுதிகளுக்கான அங்கிலிக்கன் ஆயர்களும் கூட்டறிக்கை ஒன்றை விடுத்தார்கள்.கிறிஸ்மஸ் காலத்திலாவது யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு அவர்கள் இலங்கை அரசையும், விடுதலைப் புலிகளையும் கோரினார்கள்.

நத்தார் பண்டிகையின் உணர்வை மதித்து, யுத்த நிறுத்தத்திற்கான முதல் முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், அரசின் இந்த நடவடிக்கையை உலக நாடுகள் அரசியல் முதிர்ச்சி மற்றும் தாராளத் தன்மைக்கான அறிகுறியாகக் கருதமுடியும் என்றும் சுட்டிக்காட்டினர்.

ஆனால், அவர்களின் கோரிக்கையை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துத் தனது அரசியல் முதிர்ச்சியின் அளவையும் தாராளப் போக்கின் மட்டத்தையும் நிரூபித்து விட்டது இலங்கை அரசு.2002 இல் சர்வதேச அனுசரணையுடன் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்தம் உத்தியோகபூர்வமாக முறிக்கப்பட்ட பின்னர் இலங்கை சந்திக்கப்போகும் முதலாவது கிறிஸ்மஸ் இது.

கடந்த வருட கிறிஸ்மஸ் தினத்தை, மோசமாக வெடித்த யுத்தத்தின் சூழ்நிலையில், யுத்த நிறுத்தம் உத்தியோகபூர்வமாக முறியும் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது இலங்கை சந்தித்தது.அந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வமாகக் கிழித்துப்போட்டு, யுத்தப் பிரகடனத்தைச் செய்தது இலங்கை அரசுதான். அந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் தாங்கள் நிராகரிக்கின்றார்கள் என்று மறு தரப்பில் உள்ள விடுதலைப் புலிகள் இன்னும் அறிவிக்கவில்லை.

இலங்கை அரசால் தங்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தத்தைத் தாங்கள் வேறு வழியின்றி எதிர்கொள்கின்றார்கள் என்றே புலிகள் இன்றும் - இன்னும் - கூறிவருகின்றார்கள்.எனவே, யுத்தநிறுத்தம் ஒன்றை நத்தார் காலத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றால், கிறிஸ்தவ ஆயர்கள் சுட்டிக்காட்டியமை போன்று இலங்கை அரசுதான் அதற்கான முன் முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டும்.ஆனால், அவர்களின் யுத்த நிறுத்தக் கோரிக்கை வெளிவந்த கையோடே அதை நிராகரிக்கும் இலங்கைத் தரப்பின் பிரதிபலிப்பும் வந்துவிட்டது. அது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, சிறுபான்மையினரான தமிழர்களை அடிமைப்படுத்தி ஆளவேண்டும் என்ற மேலாண்மைத் திமிரில் மிதக்கும் பௌத்த, சிங்கள ஆட்சிப்பீடம் அதனால் யுத்தவெறிகொண்டு நிற்கிறது. அத்தகைய யுத்த தீவிர நெறியில் நிற்கும் அரசுத் தலைமை, யுத்த நிறுத்தத்துக்கு இணங்க மாட்டாது என்பது எதிர்பார்க்கப்பட்டதே.

ஆகவே, அரசின் பதில் குறித்து ஆச்சரியப்படுவதற்கோ, வியப்படைவதற்கோ எதுவுமில்லை.ஆனால் - நத்தார் காலத்தில் யுத்த நிறுத்தம் செய்து, அமைதி பேணி, கொடூர யுத்தத்தில் சிக்கித் தவிக்கும் வன்னி மக்களுக்கு அந்த சமாதானப் பிரபுவின் பூமிக்கான வருகைக் காலத்திலாவது அமைதியும், சமாதானமும் கிட்டவும், அச்சமும் அவலமும் தள்ளிப்போகவும் வாய்ப்பளிக்குமாறு கோரும் இறைஞ்சலை கத்தோலிக்கத் திருச்சபையில் ஒரு சாரார் மாத்திரம் தனித்து விடுக்கும் நிலைமையே காணப்படுவது நிச்சயம் விசனத்துக்குரியது.

உயர்வும், செழுமையும், பண்பியல்புகளும்மிக்க - அன்பையும் சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் போற்றும் மாண்புடைய - மதங்களையும் அவற்றின் மதத் தலைவர்களையும் கூட, இன்று பேரினவாதம் தன் பிடிக்குள் ஆகர்ஷித்துக்கொண்டு விட்டதோ என்ற சந்தேகத்தை இந்த நிலைமை ஏற்படுத்தியிருக்கின்றது. கிறிஸ்மஸ் காலத்தில் யுத்தநிறுத்தம் செய்யுங்கள் என்ற கத்தோலிக்க ஆயர்களின் கோரிக்கையில் பெரும்பாலான ஆயர்கள் கையெழுத்திடவில்லை என்ற தகவல் மனதை நெருடுகின்றது.

இப்போது மொழி ரீதியாகப் பாயும் பேரினவாதம் அதில் வெற்றிவாகை சூடியதும் அடுத்து மத ரீதியாகத் திரும்பும் - ஏற்கனவே சற்று அத்திசையில் திரும்பிவிட்டது - என்ற யதார்த்தப் புறநிலையைப் பலரும் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியதே.

இனத்தின் பெயரால் - மொழியின் பெயரால் - ஏற்பட்ட விளைவுகளின் கொடூரம் போதும். தாங்க முடியாத வேதனையை அது இன்று தந்து நிற்கிறது.இனி, மதத்தின் பெயரால் அந்தப் பிளவுகளை ஏற்படுத்தத் துணைபோகக் கூடாது, அப்படித் துணை போவது தவறு என்பது புரிகின்றது.

ஆனாலும் யதார்த்தத்தை சுட்டிக் காட்டாமலும் இருக்க முடியாது என்பதால் இங்கு வடிக்கப்பட்டதே இக்கருத்து. மதப் பிளவைத் தூண்டும் எண்ணத்தில் இது முன்வைக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம்.
_________
Uthayan.com

No comments: