Sunday, 21 December 2008

** வெள்ளப் பெருக்கினால் வன்னியில் மூன்றரை இலட்சம் மக்கள் பாதிப்பு!

படைநடவடிக்கைகளாலும், வெள்ளப்பெருக்கினாலும் வன்னியில் மூன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பாதிப்புகள் தொடரானவையாக அமைந்துள்ளன.


இவ்விதம் இவை தொடருமானால் உலக உணவுத்திட்ட அதிகாரி அண்மையில் குறிப்பிட்டிருப்பதைப் போல் வன்னியிலுள்ள மக்கள் சோமாலியா நிலைக்கு மாறிக்கொண்டிருப்பதை தடுக்க முடியாது என தமிழர் புனர்வாழ்வுக்கழகத் திட்டமிடல் பணிப்பாளர் திரு.லோரன்ஸ் கிறிஸ்ரி தெரிவித்துள்ளார்.

படைநடவடிக்கைகளால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளும், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களும் வன்னி மக்கள் வாழ்வில் பெரும் அவலநிலையை ஏற்படுத்தியுள்ளன. படையினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் பெருமளவு பயிர்நிலங்கள் கைவிடப்பட்டுள்ள நிலையில் புதிதாக பயிர்செய்யப்பட்ட நிலங்களும் வெள்ளத்தால் அழிவடைந்துள்ளன.


இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உலக உணவுத்திட்டத்தால் வழங்கப்படுகின்ற உணவும் மிகவும் குறைந்தளவிலேயே வழங்கப்படுகின்றன. குழந்தைகளும் வளர்ந்தவர்களும் போசாக்கற்ற நிலைக்குத்தள்ளப்பட்டு வருகிறார்கள்.
இடம்பெயர்ந்த மக்கள் தற்போதைய வெள்ளப்பெருக்கின் பின்னர் பாரிய சுகாதார சீர்;கேடுகளை எதிர்கொள்கின்றனர். தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்குப் பின்னர் வன்னியில் மலேரியா மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. மலேரியா நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் மலத்தியோன் போன்ற மருந்துகளை எடுத்துவரவும் படையினர் தடுத்து வருகின்றனர்.

மருத்துவமனைகளில் மருந்துகளில்லை. இந்த எல்லாம் சேர்ந்து எமது மக்களை சோமாலியா நிலைக்கு கொண்டு செல்லும் நிலமை தோன்றியுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் உணவையும், மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளையும் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது.

இந்த அபாயத்தை எமது புலம்பெயர்ந்த மக்களதும், இந்தியத் தமிழகத்தினதும் பங்களிப்புக்களுடேயே தடுத்து நிறுத்த முடியும் எனவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை குறித்து ஐ.பி.சியிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
_________
Sankathi.com

No comments: