Saturday 27 December 2008

** உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்ட ஆழிப்பேரலையில் உயிரிழந்தோர் நிகழ்வு

ஆழிப்பேரலையில், உயிரிழந்த உறவுகளின் நான்காம் ஆண்டு நினைவு நேற்று உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. நினைவாலயம், உயிரிழந்தோர் புதைக்கப்பட்டுள்ள நினைவுச் சதுக்கங்கள் உள்ளிட்ட இடங்களில் உறவுகளாலும், மக்களாலும் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழர் புனர்வாழ்வுக் கழக அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் மூர்த்தி தலைமையில் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள சுனாமி நினைவாலய வளாகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.


பொதுச்சுடரைத் தமிழத்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் ஏற்ற, தேசியக்கொடியை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் ஏற்றினார். ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாக பொது சுடரை முல்லை. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பார்த்தீபன் ஏற்றினார். புதுக்குடியிருப்பு முருகன் ஆலய பிரதமக்குருக்கள் மலர்மாலை அணிவித்தார்.

மலர்வணக்கத்தை விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் ஆரம்பித்துவைத்தார். அடுத்து க.வே.பாலகுமாரன், புதுக்குடியிருப்பு வணிகர் கழகத்தலைவர் செ.செல்வரச்சந்திரன், முருகன் ஆலயப்பிரதம குருக்கள் ஆகியோர் நினைவுரையாற்ற, சிறப்புரையைத் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆற்றினார். இந்நிகழ்வு சுவிஸ் அறத்தமிழர் மன்ற புனர்வாழ்வுக்கழகத்தில் இடம்பெற்றது.


முல்லை மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் ஒழுங்குபடுத்தலில் முல்லைத்தீவு நினைவாலயத்தில் முல்லைப்பிரதேச வர்த்தக சங்கத்தலைவர் பி.மனோ தலைமையில் நினைவு நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை முல்லை.மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் சமாசத்தலைவர் ம.குணசிங்கராசா ஏற்றினார். தேசியக்கொடியினை கடற்புலிகளின் துணைத் தளபதி த.விநாயகம் ஏற்றினார். தொடர்ந்து ஆழிப்பேரலையில் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாக பெற்றோர்கள், பிள்ளைகள், உறவினர்கள் சமநேரத்தில் சுடரேற்றி நினைவுகூர்ந்தனர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நினைவாலயத்தில் புதுக்குடியிருப்புப் பங்குத்தந்தை இராசசிங்கம் அடிகளார் ஆழிப்பேரலையில் இறந்த மக்களை நினைவுகூர்ந்து வழிபாட்டினை மேற்கொண்டார். இதன்பின்பு நினைவுச் சமாதிக்கு அனைவரும் மலர்கள், மலர்மாலைகள் கொண்டு வணக்கம்செலுத்தினார்கள் பெருமளவானோர் கூடி நிகழ்வில் கலந்துகொண்டனர்.



முல்லை மாவட்ட அரச அதிபர் செயலகத்தில் நண்பகல் 12.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் ஆழிப்பேரலையில் இறந்த அனைவரின் நினைவாகப் பொதுச்சுடரினை முல்லை மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், மேலதிக அரச அதிபர் க.பார்த்தீபன் ஆகியோர் ஏற்றினார்கள். அரச பணியாளர்களின் நினைவுப்படத்திற்கான நினைவுச் சடர்களை திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ம.கிறேசியன் வில்வராசா, உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான திருமதி க.பவானி திருமதி சாந்தி, திருமதி சுகந்தி, பணியாளர்களான நளாயினி, கணேசமூர்த்தி, திருமதி அருட்செல்வி, மாவட்ட மேலதிக பதிவாளர் ஆகியோர் ஏற்றினார்.

தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து காவுகொள்ளப்பட்ட மக்களுக்கு வணக்கம் செலுத்தினர். வடமராட்சி கிழக்கில் உறவுகள் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன. பொதுச்சுடரினை கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான மணாளன் ஏற்றினார். தேசியக்கொடியினை வடமராட்சி கிழக்குக் கோட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் அண்ணாத்துரை ஏற்றினார்.

தேசியக்கொடியினை வடமராட்சி கிழக்குக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் அண்ணாத்துரை ஏற்றினார். ஆழிப்பேரலை பொதுப்படத்திற்கான ஈகச்சுடரினை ஏற்றி, மலர் மாலையினை கடற்புலிகளைச் சேர்ந்த மோகன் அணிவித்தார்.

பிரதான ஈகச்சுடரினை தமிழர்புனர்வாழ்வுக்கழக உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் நரேன் ஏற்ற சமநேரத்தில் ஆழிப்பேரலையால் சாவடைந்த உறவுகளுக்கு உறவினர்கள் சுடரேற்றி வணக்கம் செலுத்தினார்கள். நினைவுரையினை நரேன் ஆற்றினார். இந்நிகழ்வுச் சதுக்கத்தில் 1600 மக்கள் புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
__________
Sankathi.com

No comments: