சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு வழங்கப்படும் இராணுவ உதவிகளை மட்டுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.2008 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10ம் திகதி அமெரிக்க காங்கிரஸினால் அங்கீகரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இராணுவப் பயிற்சி, நிதியுதவி, இராணுவத் தளபாட விநியோகம் உள்ளிட்ட இராணுவ உதவிகள் வரையறுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் போராளிகளை யுத்தத்தில் ஈடுபடுத்தும் நாடுகளுக்கு எதிராக இந்தச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, ஆப்கானிஸ்தான், சாட், கொங்கோ, சூடான், உகண்டா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா மட்டுப்படுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க படையில் சிறுவர் போராளிகளை இணைத்தல் அல்லது அரச ஆதரவு துணை இராணுவக் குழுக்களில் சிறுவர் போராளிகளை இணைத்தல் ஆகியன பாரிய குற்றச் செயல்களாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க ஆயுதங்கள் சிறுவர்களின் கைகளில் சேர்வதனை ஏற்றுக் கொள்ள முடியாதென அமெரிக்க உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் இயங்கும் துணை இராணுவக் குழுக்களில் சிறுவர் போராளிகள் இணைக்கப்படுவதாக 2008 ஆம் ஆண்டு மார்ச்சில் வெளியான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கான இராணுவ உதவிகள் குறைக்கப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
__________
Sankathi.com








No comments:
Post a Comment