Friday 26 December 2008

** ஒபாமா அரசில் இலங்கை விடயத்தை பில் கிளின்டனே இனிக் கையாள்வாராம்! - கணவரை அப்பொறுப்பில் நியமிக்க ஹிலாரி முடிவு!

அமெரிக்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் ஹிலாரி கிளின்டன் அம்மையார், இந்தியா - பாகிஸ்தான் - இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய இந்திய உபகண்டப் பிரதேசத்தின் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான தமது பிரதிநிதியாகத் தமது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளின்டனின் பெயரைப் பிரேரித்திருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி பராக் ஒபாமா பதவியேற்கும் சமயத்தில் புதிய வெளிவிவகார அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் பொறுப்பேற்பார்.

அவர், சர்வதேச ரீதியான இராஜதந்திரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இராஜதந்திரிகள் அடங்கிய செயலணி ஒன்றை உருவாக்கி வருகின்றார் என்று கூறப்படுகின்றது.இந்திய உபகண்டப் பிரதேசம் பெரும் பதற்றத்துக்கும் மோதலுக்கும் இடமாகியுள்ளதால் அமெரிக்காவின் சார்பில் இப்பிராந்தியப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு தேர்ந்த இராஜதந்திரி ஒருவர் தேவைப்படுகின்றார் என ஹிலாரி கருதுகின்றார் என்றும் -

எட்டு வருடங்கள் ஜனாதிபதியாக இருந்து பல்வேறு சர்வதேசப் பிரச்சினைகளை வெற்றிகரமாகக் கையாண்ட அனுபவஸ்தரான தமது கணவர் பில் கிளிண்டனே இதற்குப் பொருத்தமானவர் எனக் கருதி அவரின் பெயரை ஹிலாரி பிரேரித்துள்ளார் என்றும் - கூறப்படுகின்றது.

இதேசமயம்- ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப் பணிகளைக் கண்காணிப்பதற்கு ஐ.நாவின் பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்குப் பல தடவைகள் வந்து சென்றுள்ள பில் கிளிண்டன், அதன் காரணமாக இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் நன்கு பரிச்சயமாகி, விடயங்களை ஏற்கனவே நன்கு புரிந்து கொண்டவர் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
__________
Uthayan.com

No comments: