Tuesday, 23 December 2008

** விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டுக்கு தடை!- எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டுக்கு போலீஸார் தடை விதித்துள்ளதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அக் கட்சியின் தலைவர் திருமாவளவன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை புல்லா அவென்யூவில் தமிழீழ அங்கீகார மாநாடு மற்றும் இளஞ்சிறுத்தைகள் பாசறை தொடக்க விழா ஆகியவை 26ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வந்தனர்.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி திருமாவளவன் பேசியதாக கூறி காங்கிரஸார் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இரு கட்சியினருக்கும் இடையே கடும் மோதலும் மூண்டுள்ளது. திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரசார் வற்புறுத்தி வருகிறார்கள்.பரபரப்பான இந்த சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகளின் தமிழீழ அங்கீகார மாநாட்டுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். தடைக்கான காரணத்தை விளக்கி இளஞ்சிறுத்தைகள் பாசறையின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வத்திடம் போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

மாநாடு நடைபெறும் பகுதி நெரிசல் மிகுந்த பகுதி. பண்டிகை காலம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் அந்த பகுதியில் மாநாடு நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்படும். எனவே மாநாடு நடத்த தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.உயர் நீதிமன்றத்தி்ல் திருமா வழக்கு:இந்த அனுமதி மறுப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இன்று உயர் நீதிமன்றத்தில வழக்குத் தொடர்ந்தார்.

அவரது வழக்கறிஞர் என்.எஸ். ராஜா தாக்கல் செய்துள்ள மனுவில்,மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி மறுத்ததை ரத்து செய்ய வேண்டும். மாநாட்டுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.வழக்கு முறைப்படி பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு வரவேண்டுமானால் தாமதம் ஆகும் என்பதால் உடனடியாக விசாரணைக்கு எடுக்கும்படி வழக்கறிஞர் வற்புறுத்தினார்.இதையடுத்து மனுவை இன்று மாலை விசாரிப்பதாக நீதிபதி சுகுணா தெரிவித்தார்.

திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், இந்த தடை உத்தரவை சட்டப்படி சந்திப்போம். உடனடியாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து திட்டமிட்ட நாளில் மாநாட்டை நடத்துவோம். தடை விதித்ததற்கான காரணம் சட்டப் பூர்வமானது இல்லை.நாங்கள் ஏற்பாடு செய்துள்ள மாநாடு தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்துக்கு ஆதரவாகவோ, இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ இல்லை. குறிப்பிட்ட நாளில் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் என்றார்.
________________

No comments: