Saturday, 13 December 2008

** ‘மனிதாபிமான நடவடிக்கை’யால் உருவாகும் மனிதப் பேரவலம்!

<<உதயன்.கொம்>>
ஈழத் தமிழர் தாயகத்தின் மீது போர் தொடுத்திருக்கும் கொழும்பு அரசு, அதனை யுத்தம் அல்ல என்றும், மனிதாபிமான நடவடிக்கை என்றும் சித்திரித்து உலகை ஏமாற்றுகின்றது.கொழும்பு அரசு தொடுத்திருக்கும் யுத்தத்தின் கொடூரத்தாலும், நாச செயற்பாடுகளினாலுமே வன்னிப் பெருநிலப் பரப்பில் சரித்திரத்தில் என்றுமில்லாதவாறு இன்று மனிதப் பேரவலம் உருவாகியிருக்கின்றது என்பது வெளிப்படை.

யுத்தத்தினாலும், அதைத் தொடர்ந்து நேர்ந்த வெள்ளப் பேரழிவு என்ற அனர்த்தத்தினாலும் பல லட்சக்கணக்கில் அங்கு இடம்பெயர்ந்து பேரவலப்படும் மக்களின் தற்போதைய நிலைமையை நேரில் கண்ட உலக உணவுத்திட்ட அதிகாரி இந்த உண்மை நிலையின் மோசக்கட்டத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றார்."வன்னிப் பகுதியில் உள்ள மக்களின் தற்போதைய நிலைமை மிகமிக மோசம். ஆகக்குறைந்தளவு வாழ்க்கை வசதிகள் கூட இல்லாமல் அந்த மக்கள் பெரிதும் கஷ்டப்படுகின்றார்கள். சோமாலியாவிற்குப் பின்னர் நான் இவ்வாறான நிலையை இங்குதான் காண்கிறேன். சோமாலியாவை விட இங்கு நிலைமை மோசம் என்று கூறலாம்." - என அதிர்ச்சித் தகவலை அவர் அப்பட்டமாகவே வெளியிட்டிருக்கின்றார்.உலக உணவுத் திட்டத்தின் உதவிப் பொருட்களுடன் வன்னி சென்ற இந்த அதிகாரி, வன்னியில் யுத்தத்தினாலும், மழை வெள்ளத்தினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் எவையுமே அற்ற நிலையில் பரிதவிக்கும் பல லட்சம் மக்களின் நிலைமையை நேரில் கண்டறிந்த பின்னர் உலகுக்கு உண்மையை அம்பலப்படுத்தியிருக்கின்றார்.

ஐ.நா.முகவர் அமைப்புகள், சர்வதேச - உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகளை, அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்ற காரணத்தைத் தெரிவித்து வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்து வெளியேற்றிய இலங்கை அரசு, அப்பிரதேசம் மீதான தனது இராணுவ முற்றுகை மூலம் அங்கு பெரும் இரும்பு வேலியை உருவாக்கிக்கொண்டு, அந்த மறைப்புக்குப்பின்னால் போரின் பெயரால் பேயாட்டம் போடுகிறது.

முற்றுகைக்குள்ளாகியுள்ள வன்னிப் பெருநிலப்பரப்புக்கு உணவு, மருந்து,உடுபுடவை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட போதியளவில் செல்ல முடியாமல் கடுமையான - இறுக்கமான - கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது.எனினும், ஐ.நா. அமைப்புகள் மற்றும் சர்வதேச நாடுகள் - குறிப்பாகத் தமிழகம் போன்ற தரப்புகள் வன்னி மக்களுக்காகக் காட்டும் பரிவு, அதனடிப்படையில் இலங்கை அரசின் கெடுபிடிகளுக்கு எதிராக அவை பிரயோகிக்கும் கடும் அழுத்தம் ஆகியவை காரணமாக, வன்னியில் வாழும் பல லட்சம் அகதிகளுக்கும் அரைவயிற்றுக் கஞ்சிக்கான உணவுப் பொருட்களேனும் தற்போது உள்ளே போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆனால் அத்தியாவசிய மருந்துகள், சுகாதார வசதிகளை நிறைவுசெய்யும் அடிப்படை மூலப்பொருட்கள், உபகரணங்கள் மற்றும் உடுபுடவைகளுக்குத் தேவையான துணிவகைகள் என்பவற்றை அங்கு எடுத்துச் செல்வதற்குக் கடும் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கின்றது என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிடுகின்றன.வன்னியில் மனிதப் பேரவலம் நேர்ந்திருக்கின்றது என்றும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு அங்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது என்றும் வெளியாகும் செய்திகளை இலங்கை அரசு மறுக்கின்றது.

அங்குள்ள உயர் அரசு அதிகாரிகளை இப்பாதிப்புகள் பற்றிய புள்ளி விவரங்களைப் பகிரங்கப்படுத்தக் கூடாது என்று எச்சரித்து, கட்டுப்படுத்தியிருக்கும் அரசு,‘வேலிக்கு ஓணான் சாட்சி’ என்பதுபோல, வன்னியில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை என்ற தனது கூற்றுக்கு இந்த அதிகாரிகளை ஆதாரமாகவும், சாட்சிகளாகவும் முன்னிறுத்தவும் முயல்கின்றது.

பொருளாதாரம், போக்குவரத்து மற்றும் ஏனைய வாழ்வியல் அம்சங்கள் தொடர்பான கடும் தடைகளையும் கட்டுப்பாடுகளையும் வன்னி மீது விதித்து அந்த மக்களை நலிவுறச் செய்து, அதன் மூலம் இலகுவாக அந்தப் பிரதேசங்களை ஆக்கிரமித்து, கைப்பற்றி, அம்மக்களை அடிமைப்படுத்துவதே ஆட்சித் துறையின் ஒரே இலக்காகும்.

வன்னிப் பெருநிலப்பரப்பின் மீதான தனது தாக்குதல் நடவடிக்கையை மிகமிகத் தீவிரமாக்கியிருக்கும் இலங்கை அரசு, அந்த யுத்தம் காரணமாகத் தினசரி படுகாயமடையும் பொதுமக்களுக்கு அவசியமாகத் தேவைப்படும் அடிப்படை மருந்து வகைகளைக் கூட அங்கு எடுத்துச் செல்லவிடாமல் தடுத்து நிற்கின்றது.இப்படிக் கொடூர யுத்தம் மூலம் வன்னி மக்களுக்கு மனிதப் பேரவலத்தை உருவாக்கிக்கொண்டு அதனை மனிதாபிமான நடவடிக்கை எனச் சித்திரிக்க முற்படுவது பெரும் அபத்தமாகும்.

இதேபோல, கிழக்கை இலங்கைப் படைகள் கைப்பற்ற முனைந்தபோதும் அதனையும் மனிதாபிமான நடவடிக்கை என்றே இலங்கை அரசு பிரகடனப்படுத்தியது.அந்த மனிதாபிமான மீட்பு நடவடிக்கையின் பெறுபேறாக அங்கு இப்போது உருவாகியிருக்கும் மிக மோசமான மனித உரிமை மீறல் நிலைமை, அரசுத் தரப்பின் இந்த மனிதாபிமான மீட்பு நடவடிக்கையின் சீத்துவத்தை அம்பலப்படுத்தப் போதுமானதாகும்.
________________

No comments: