Friday 26 December 2008

** போரை நிறுத்த இலங்கையுடன் பேச்சு நடத்துகிறதாம் இந்தியா - பிரணாப் விரைவில் கொழும்புக்கு காங்கிரஸ் கட்சிச் செயலர் தகவல்!

இலங்கையில் நடைபெற்றுவரும் போரை உடன் நிறுத்துவது தொடர்பாக அந்த நாட்டு அரசுடன் இந்தியா இராஜதந்திர ரீதியாகப் பேச்சு நடத்தி வருகிறது. அங்கு போர்நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்காக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்வார்.

- இவ்வாறு ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அபிசேக் சிங்வி தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் டில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறினார்.

அப்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:-தி.மு.க. அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் யாரும் எச்சரிக்கை விடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அதற்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மாநில அரசுகளின் கடமை. இது தொடர்பாக தமிழக அரசுடன் காங்கிரஸ் மேலிடம் பேச்சு நடத்தி வருகிறது. அதனையே காங்கிரஸ் வலியுறுத்துகின்றது.

இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாட்டு அரசுடன் இராஜாங்க ரீதியாக இந்தியா பேச்சு நடத்தி வருகிறது. போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரைவில் இலங்கைக்குப் பயணம் செய்வார் - என்றார் அவர்.
எனினும் இலங்கை - இந்தியத் தரப்புகளுக்கு இடையில் இராஜதந்திர ரீதியில் முன்னெடுக்கப்படும் பேச்சுகளின் விவரங்கள் பற்றிய தகவல் எதையும் அவர் அங்கு வெளியிடவில்லை.
__________
Uthayan.com

No comments: