Friday 26 December 2008

** அஞ்சாத நெஞ்சுறுதி; குலையாத கொள்கை வெறி! புலிகளிடமிருந்து நாங்கள் வாங்கியவை இவையே’ - தொல். திருமாவளவன் தெரிவிப்பு

எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதி. குலையாத கொள்கை வெறி. இனத்தைக் காக்க இன்னுயிரையும் ஈயத் தயங்காத தைரியம். இப்படி புலிகளிடமிருந்து நாங்கள் நிறைய வாங்கியிருக்கிறோம். அவர்களுக்கு துளியளவு உதவிகளைக்கூட எங்களால் செய்ய முடியவில்லையே என்பதுதான் எங்களின் மகா வேதனை.
- இவ்வாறு தமிழகத்திலிருந்து வெளிவரும் ஊடகமொன்றுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவித்திருப்பவை வருமாறு-
புலிகளுக்கு யானைப்பசி. எத்தனை கோடிகள் அவர்களுக்குக் கிடைத்தாலும், அவர்களின் தேவையைத் தீர்க்க முடியாது. அவர்கள் நடத்தும் யுத்தம், அவர்கள் நடத்தும் அரச, புதிய நாட்டை உருவாக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி என்பவற்றுக்கெல்லாம் எத்தனையோ கோடிகள் தேவைப்படும்.
புலிகளிடம் நாங்கள் நிறைய வாங்கி இருப்பது உண்மைதான். எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதி. குலையாத கொள்கை வெறி. இனத்தைக் காக்க இன்னுயிரையும் ஈயத் தயங்காத தைரியம். இப்படி புலிகளிடமிருந்து நிறைய வாங்கி இருக்கிறோம். அவர்களுக்கு துளியளவு உதவிகளைக்கூட எங்களால் செய்ய முடியவில்லையே என்பதுதான் எங்களின் மகா வேதனை.

புலிகளிடம் கையேந்திக் கட்சியை வளர்க்கும் நிலை எங்களுக்குக் கிடையாது. யதார்த்தத்தில் யாருக்கும் உதவுகின்ற நிலையில் புலிகளும் இல்லை. இப்படியான பொய் வதந்திகளைக் கிளப்புபவர்களைப் பார்த்து நான் ஆத்திரப்படவில்லை. அனுதாபப்படுகிறேன் - என்றார்.

தங்கபாலுவும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் தவறான கருத்துகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி, என் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்துகிறார்கள். அன்னை சோனியா சொல்படி இவர்கள் செயல்படுகிறார்களா இல்லை அம்மாவின் (ஜெயலலிதா) இயக்குதல்படி செயற்படுகிறார்களா எனத் தெரியவில்லை.

அ.தி.மு.க. கூட்டணியில் இப்போது கம்யூனிஸ்ட் இடம் வகிக்கிறது. அதனால் காங்கிரஸ் அந்தக் கூட்டணியில் இடம்பெற வாய்ப்பில்லை. காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவும் வாய்ப்பு குறைவுதான். இதைவைத்து தி.மு.க. கூட்டணியை உடைத்து பலவீனமாக்க அ.தி.மு.க. திட்டம் போடுகிறது.
இதற்கேற்றாற்போல் காங்கிரஸ் தலைவர்கள் எங்களை மையமாக வைத்து தி.மு.க. அரசுக்கு குடைச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களின் பொறுமைக்கும் நிதானத்துக்கும் ஒரு அளவு இருக்கிறது.

ஈழ விவகாரத்தில் இறையாண்மையை மீற மாட்டேன் என உறுதி கொடுத்துவிட்டேன். சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்ட விவகாரத்திலும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. இந்த உண்மைகள் தெரிந்தும், கைதுக்கு வலியுறுத்தும் காங்கிரஸ் தலைவர்கள் விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் வைத்துக்கொள்ளக் கூடாது என கலைஞரை வற்புறுத்துகின்றனர் எனவும் சொல்கிறார்கள்.

அவர்கள் வெளிப்படையாக அறிவித்தால், நாங்களும் வெளியேறத் தயார். சட்டத்துக்கு உட்பட்டு, என் மீது நடவடிக்கைகள் பாயுமானால் அதனை எதிர்கொள்வதில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை. அதற்காக தி.மு.கவுடனான இணக்கத்தையோ பாசத்தையோ உடைத்துக்கொள்ள மாட்டோம். அவர்கள் மீது ஆத்திரப்பட மாட்டோம். தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறவும் மாட்டோம் - என்றார்.
__________
Uthayan.com

No comments: