Monday, 8 December 2008

** தமிழக அரசியல் கோமாளிகளின் கோரிக்கைகளை இந்திய மத்திய அரசு கேட்காது: சிறிலங்கா இராணுவத் தளபதி!

இந்திய அரசாங்கமானது தமிழ்நாட்டு அரசியல் கோமாளிகளின் கோரிக்கைகளை கேட்கமாட்டாது என்றும் விடுதலைப் புலிகளுடன் கொழும்பு போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ளாது என்றும் சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிறிலங்கா அரச சார்பு ஊடகமான டெய்லி நியூஸ் நாளேட்டின் வாரப் பதிப்பான சண்டே ஒப்சேர்வருக்கு சரத் பொன்சேகா வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு:

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் என்பதில் இந்தியா அக்கறை கொண்டிருக்கவில்லை என நான் உறுதியாக நம்புகின்றேன்.
விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவித்துள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் தொடர்புள்ளதன் காரணத்தினால் அவருக்கு சாவொறுப்பு தண்டனை வழங்குவதற்காக கையளிக்கப்படவேண்டும் என்றும் இந்தியா கேட்டுள்ளது.

பம்பாய் குண்டுவெடிப்பு நிகழ்விற்கு பிற்பாடு மன்மோகன்சிங்கின் அரசிற்கு அதிகமான பிரச்சினைகள் உள்ளதோடு இலங்கை பிரச்சினை தொடர்பாக இந்தியா ஏற்கனவே தனது நிலைப்பாட்டினை தெரிவித்தும் உள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டினை இந்தியா ஏற்கனவே எடுத்துள்ளதுடன் விடுதலைப் புலிகளுக்கு சார்பான நிலைப்பாட்டினை எடுக்கப்போவதில்லை.

இந்தியா தமிழ் மக்களின் உணர்வலைகள் தொடர்பாக மறுபக்கம் தலையை திருப்பமுடியாது என்பதுடன் படை நடவடிக்கைகளில் அப்பாவி தமிழ் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதிலும் அக்கறையாக உள்ளது.
இதன் காரணமாகவே தமிழ் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்தியா உணவு மற்றும் ஏனைய நிவாரணப் பொருட்களை அனுப்புகின்றது.
இந்தியாவின் இந்த 'அப்பாவி தமிழ் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது' என்ற கரிசனைக்கு சிறிலங்காவானது தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குகின்றது. இந்தியாவும் எம்மிடம் இதனையே எதிர்பார்க்கின்றது.

விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியிலும் மோசமான வானிலையிலும் சிறிலங்கா படையினர் கொழும்பில் இருந்து 350 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் மையமாக முன்னர் விளங்கிய கிளிநொச்சி நகரின் பலமுனைகளில் மிகவும் அண்மையாக சமர்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னேறும் எமது படையினர் நிச்சயமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றுவார்கள். இதன்பின் விடுதலைப் புலிகள் ஒன்றில் கடலுக்குள் குதிக்கவேண்டும் அல்லது சயனைட் வில்லைகளை உட்கொள்ளவேண்டும் என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

சிறிலங்கா படையினர் விடுதலைப் புலிகளுடன் மோதல்களில் ஈடுபடும்போது பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாக கருத்தில் எடுப்பதில்லை என சரத் பொன்சேகாவிடம் சண்டே ஒப்சேர்வர் கேள்வி எழுப்பிய போது, இந்தக் குற்றச்சாட்டுகள் விடுதலைப் புலிகளினால் லஞ்சம் வழங்கப்பட்ட, ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்ற தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினால் மட்டுமே கூறப்படுகின்றது.

படை நடவடிக்கைகளின்போது பொதுமக்கள் கொல்லப்படுவதில்லை என்பது இவர்களுக்கு நன்கு தெரிந்தபோதும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இவர்கள் சில அறிக்கைகளை வெளியிடுகின்றனர். ஏனெனில் இவர்களின் பிழைப்பானது விடுதலைப் புலிகளிடமே தங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்படுவார்களானால் அரசியல் கோமாளிகளான நெடுமாறன், வைகோ மற்றும் இவர்களைப் போன்ற விடுதலைப் புலிகளை ஆதரவளிப்பவர்கள் தமது வருமானத்தினை இழப்பார்கள்.

விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளானது தமிழ்நாட்டிற்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதுடன் அவர்களது தனிநாடு என்ற கோட்பாடானது இந்தியாவின் இறைமைக்கு மிகவும் அச்சுறுத்தலாகும்.
பொதுவாக நோக்குமிடத்து விடுதலைப் புலிகளின் தனிநாட்டு கோட்பாடானது இந்தியாவிற்கு ஒரு அச்சுறுத்தலாகும்.

ஏனெனில் இந்தக் கோட்பாடானது தமிழ்நாட்டிற்கும் பரவக்கூடும். தற்போது தமிழ்நாடானது இந்திய அரசிற்கு எதிராக போராட்டங்களை நடத்துவதில் இருந்தும் விடுதலைப் புலிகளின் சார்பாக நிலைப்பாட்டினை எடுப்பதில் இருந்தும் இது நீரூபணமாகின்றது என சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
__________
Puthinam.com

No comments: