Tuesday, 9 December 2008

** சரத் பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டும் - பிரதமருக்கு வைகோ கடிதம்

தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என வர்ணித்துப் பேசியுள்ள இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என இலங்கை அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.பொன்சேகாவின் திமிர் பேச்சுக்கு முதல் ஆளாக டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார்.

முதல்வர் கருணாநிதியிடம் இதுகுறித்து செய்தியார்கள் கேட்டதற்கு, அப்படி பொன்சேகா பேசியிருந்தால் அது கண்டனத்துக்குரியதுதான் என்றார்.பொன்சேகாவால் அரசியல் கோமாளி என சாடப்பட்டுள்ளவர்களில் ஒருவரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், பொன்சேகாவை கடுமையாக சாடி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.இந்த நிலையில் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:
இலங்கைக்கு ராணுவ ரீதியாக இந்தியா உதவிகள் செய்வதன் மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது, நேரு மற்றும் இந்திரா காந்தி காலத்தில் கடைபிடிக்கப்பட்ட தொலைநோக்கு வெளியுறவு கொள்கையை காற்றில் பறக்க விட்டதால் இலங்கை ராணுவத்தின் தலைமை தளபதி பொன்சேகா அகம்பாவத்துடன் தமிழக தமிழக அரசியல் தலைவர்களை "அரசியல் கோமாளிகள்' என்று கூறி அவமதித்துள்ளார்.

இந்திய அரசியல் தலைவர்களை பற்றி இதற்கு முன்பு எந்த ஒரு வெளிநாட்டின் ராணுவ தலைமை தளபதியும் இவ்வாறு இழிவுபடுத்தி பேசியதில்லை.ஒரு ஜனநாயக நாட்டில் வெளிநாட்டு தலைவர்களை பற்றி ராணுவ தளபதிகள் கருத்து கூறுவது கிடையாது. ஆனால் இலங்கை ராணுவத்தின் தலைமை தளபதி பொன்சேகா இந்திய அரசு மற்றும் இந்திய மக்களை இதுவரை இல்லாத வகையில் அவமதித்துள்ளார்.

எனவே சரத்பொன்சேகாவின் கருத்துக்கு இந்திய அரசு கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். சரத்பொன்சேகாவின் நிபந்தனையற்ற மன்னிப்பை இந்தியா கோர வேண்டும். அத்துடன் அவரது இழிவுபடுத்தும் பேச்சு தொடர்பாக இலங்கை அதிபரிடமும் இந்தியா விளக்கம் கேட்க வேண்டும்.அவ்வாறு இலங்கை அரசு இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கா விட்டால் ராஜீய ரீதியில் கடுமையான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு இந்தியாவில் உள்ள இலங்கை தூதரை திருப்பி அனுப்ப வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
________________

No comments: