யேர்மனியில் உள்ள சிறீலங்காத் தூதரகத்தின் ஏற்பாட்டில் பிராங்போட் நகரில் இடம்பெற்ற 60வது சுதந்திரதின் கண்காட்சிக்கு சென்ற இரு தமிழர்கள் மீது கத்திக் குத்து மற்றும் தாக்குதல்களை சிங்களவர்கள் நடத்தியுள்ளனர். கடந்த 5ம் நாள் தொடக்கம் 7ம் நாள் வரை தமிழினப் படுகொலைகளை நியாயப்படுத்தியும், தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக சித்தரிக்கும் வகையிலும் கண்காட்சி யேர்மனிக்கான சிறீலங்காத் தூதரகத்தினால் ஒழுங்கமைக்கபட்டது.சிறீலங்காத் தூதரகத்தின் பொய்யான பரப்புரைக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் பல நூற்றுக்கணக்கான தமிழீழ மக்கள் அணிதிரண்டு சிறீலங்காத் தூதரகத்தினால் பல இலட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட கண்காட்சியை முறியடிக்கும் வகையில் சிறீலங்கா அரசினால் மேற்கொண்டு வரும் தமிழினப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், மற்றும் ஆட்கடத்தல்கள், சிறுவர் தூஸ்பிரயோகங்களை வெளிப்படுத்தும் தகவல் நிலையம், பதாதைகள், துண்டுப்பிரசுரங்கள், சொற்கட்டுகளையும் யேர்மனிய மக்களுக்கும் பிறநாட்டு மக்களுக்கும் வழங்கி தூதரகத்தின் பொய்யான பரப்புரையை எடுத்துரைத்து முறியடித்துள்ளனர்.
இதனால் கடும் சீற்றம் கொண்ட சிறீலங்காத் தூதரகம் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தை நிறுத்துவதற்கும், அப்புறப்படுத்துவற்கும் பலவழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் சிறீலங்கா தூதரகத்தின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன. இதனால் சிங்களம் மேலும் சீற்றம் அடைந்தது.யேர்மனி நாட்டுக் காவல்துறையின் அனுமதியும் ஒத்துழைப்பும் தமிழ் மக்களுக்கு கிடைத்ததால் கவனயீர்ப்புப் போராட்டம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுக்கபட்டது. இதனால் கண்காட்சி முடக்கப்பட்டு சிறீலங்காத் தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கண்காட்சிக்கும் ஏனைய நாட்டு மக்கள் செல்லாது தடுக்கப்பட்டனர்.இதனால் கடும் சீற்றம் அடைந்த சிறீலங்காத் தூதர் உட்பட சிங்களவர்கள் அனைவரும் கண்காட்சி நிறைவு செய்யும் நேரத்திற்கு முன்பே கண்காட்சியை மூடிவிட்டு வெளியேறினர்.
இதனால் முதல்நாள் கவனயீர்ப்புப் போராட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.இரண்டாம் நாள் சனிக்கிழமை இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தடையை ஏற்படுத்தும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டத்திற்காக தமிழர்களுக்காக யேர்மனிக் காவல்துறையினரால் வழங்கப்பட்ட இடத்தில் கதிரைகளையும் கூடாரங்களையும் அமைத்து 50 வரையான சிங்களவர்களை அமர்த்தி, கவனயீர்ப்புப் போராட்டத்தைக் குளப்பும் விளைவிக்க தூதரகம் முனைந்தது.எனினும் அங்கு கூடிய 300க்கும் அதிகமான தமிழீழ மக்கள் அமைதியான முறையில் யேர்மனிக் காவல்துறையினரை அழைத்து, பிரச்சினையை விளங்கப்படுத்தினர்.
குறித்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மண்ட உரிமையாளர் மற்றும் தூதுவருடன் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. எனினும் காவல்துறையினர் அவர்களின் முயற்சிக்கு இடமளிக்காது தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இடத்தை வழங்குமாறு கூறி அங்கிருந்து சிங்களவர்கள் அனைவரையும் வெளியேற்றினர்.தமிழீழ மக்களால் நடத்தப்பட்ட இரண்டாம் நாள் கவனயீர்ப்புப் போராட்டமும் வெற்றிகரமாக நடத்தி முடித்ததோடு, தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சியும் முடக்கப்பட்டது.
இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ளாத சிங்களவர்கள் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் கண்காட்சிக்குத் சென்ற 38 அகவையுடைய கிஷ்ணன் சின்னத்தம்பி என்ற தமிழர் கடுமையாகத் தாக்கியதோடு கத்தியாலும் வெட்டியுள்ளார்கள்.குறித்த கண்காட்சியைப் பார்வையிட்டுவிட்டு வெளியே வந்த சின்னத்தம்பியை சிங்களக் கடையர்கள் சூழ்ந்துகொண்டு தாக்கினர்.
இதனைத் தொடர்ந்து கண்காட்சி மண்டபத்திலிருந்து கத்தியுடன் ஓடிவந்த மற்றொரு சிங்களவர் சின்னத்தம்பியின் வயிற்றில் கத்தியால் குத்த முற்பட்டபோது, சின்னத்தம்பி தனது கையினால் கத்தியைப் பிடித்து தடுத்துள்ளார். இவ்வாறான கொலைவெறி வன்முறைத் தாக்குதலில் சின்னத்தம்பியின் கைகளில் பெரும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனைப் பார்வையிட்ட வீதியால் சென்ற மற்றொரு தமிழர் அவரைக் காப்பாற்றுவதற்காகச் சென்றபோது அவரும் சிங்கள காடையர்களினால் இருப்புக் கம்பிகள் மற்றும் கொட்டான்களால் தாக்கப்பட்டுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்கான சின்னத்தம்பி என்பவர் பிராங்போட் நகரில் உள்ள மருத்துவமனையில் சத்திரசிகிற்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மருத்துவ சிகிற்சை பெற்றுவருகின்றார்.இதேநேரம் தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு தமிழர் உட்காயங்களுக்கான சிகிற்சைகள் பெற்றபின் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யேர்மனியக் காவல்துறையினர் வழக்கைத் தாக்கதல் செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து பெரும் கொதிப்படைந்துள்ள தமிழீழ மக்கள் சிறீலங்காத் தூதரகத்தை மூடுமாறும், தூதரை வெளியேற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தினை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.இலங்கையில் தமிழர்கள் மீது கொலை வெறித் தாக்குதல்களை நடத்தும் சிறீலங்கா அரசு யேர்மனியிலும் தமிழர்களை நிம்மதியாக வாழவிடாது பல அச்சுறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
_________
Pathivu.com








No comments:
Post a Comment