Thursday, 4 December 2008

** பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு, பிரணாப் முகர்ஜியை இலங்கை அனுப்ப முடிவு!

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புவுக்கு அனுப்புவதாக இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அனைத்துக் கட்சி குழு இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுத்தது.

இந்தக் குழுவில் அமைச்சர் அன்பழகன், மத்திய அமைச்சர் பாலு, கொங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, சுதர்சனம், பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ், ஜி.கே.மணி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கெம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், முஸ்லிம் லீக் சார்பில் காதர் மொய்தீன், அப்துல் பாசீத், விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா சரத்குமார், போட்டி மதிமுக சார்பில் எல்.கணேசன் மற்றும் விஜய டி.ராஜேந்தர், ஆர்.எம்.வீரப்பன், பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் இடம் பெற்றனர்.

அப்போது இலங்கை தமிழர்கள் படும் துன்பம் குறித்தும், சிறிலங்கா இராணுவ தாக்குதலால் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது பற்றியும், போரை நிறுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் பிரதமரிடம் விளக்கமாக இந்தத் தலைவர்கள் விளக்கினர்.அப்போது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.இந்த பிரச்சனையில் இந்தியா உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உறுதியளித்த பிரதமர் தனது தூதராக பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாகவும் கூறினார்.

அவர் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவிடம் போர் நிறுத்தத்தை வலியுறுத்துவார் என்றார்.வழக்கம் போல அ.தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இக்குழுவில் இடம் பெறவில்லை. இதையடுத்து முதல்வர் கருணாநிதி, கொங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அவரிடமும் இலங்கை போர் நிறுத்தத்தை வற்புறுத்தினார்.பின்னர் கருணாநிதியை மின்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ப.சிதம்பரம் ஆகியோரும் சந்தித்தனர்.
__________
Sankathi.com

No comments: